படிக்கட்டு பயணத்துக்கு கண்டக்டர் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ்சில் சிக்னல் விளக்குகளை உடைத்த மாணவர்கள் திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே படிக்கட்டு பயணத்துக்கு கண்டக்டர் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ்சில் சிக்னல் விளக்குகளை மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று காலை 8.20 மணியளவில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் பயணம் செய்தனர்.
பஸ், பையூர் கிராமத்தின் கோரையாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிந்த போது, படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களிடம் உள்ளே வருமாறு கண்டக்டர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து, கண்டக்டர் பஸ்சை நிறுத்த வைத்து, அனைவரையும் உள்ளே செல்லுமாறு கூறியுள்ளார்.
சிக்னல் விளக்குகள் உடைப்பு
அப்போது, 2 மாணவர்கள் பஸ்சின் பின்பகுதியில் இருந்த சிக்னல் விளக்குகளை (இன்டிகேட்டர்) அடித்து உடைத்தனர். இதனால் கண்டக்டர் மற்றும் மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் பணிமனை மேலாளர் ராஜசேகரிடம் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு போலீசார் பேசினர். அதில் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதன் பின்னர் ½ மணிநேரம் தாமதமாக பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.