குழாய் உடைந்து வீணாக செல்லும் குடிநீர்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் வரும் வழியில் ஏற்படும் உடைப்பு காரணமாக பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் காணப்படுகிறது. சில பகுதிகளில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதனால் அதிகளவு குடிநீர் வெளியேறி சாலையோரமாக ஓடி கழிவுநீர் கால்வாயில் கலந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தொடர்ந்து குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. மாநகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.