குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

வைத்தீஸ்வரன் கோவிலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:-

வைத்தீஸ்வரன் கோவிலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வினியோகம்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு எடக்குடி வடபாதி ஊராட்சியில் உள்ள பெரிய அளவிலான மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கு குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கடற்கரை கிராமங்களான பூம்புகார், வானகிரி, மங்கைமடம், கீழமூவர்கரை, நெப்பத்தூர், பெருந்தோட்டம், நாங்கூர், திருவாலி, கீழச்சட்டநாதபுரம், திருவெண்காடு, மணிக் கிராமம், ராதாநல்லூர், திருநகரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழாயில் உடைப்பு

இந்த நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி அருகில் மணல்மேடு சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது.

இவ்வாறு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் வெளியேறும் குடிநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

சீரமைக்க வேண்டும்

இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளத்தால் தடுமாறி விழும் காயம் அடையும் நிலை உள்ளது. தொடர்ந்து குடிநீர் வீணாகி வருவதால் கடற்கரை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி அருகில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story