குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

திருமருகலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குழாய் உடைப்பு

திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவில் இருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்தகுழாய் மூலம் நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருமருகல் சன்னதி தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது.

வீணாகும் குடிநீர்

இதை தொடர்ந்து உடைப்பை சரி செய்ய அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் உடைப்பை சரி செய்யாமல் அப்படியே உள்ளது. தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதால் நாகூர், நாகை, வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதன் அருகில் தனியார் மழலையர் மற்றும் அரசு மாணவர் விடுதி உள்ளதால், இந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்த பள்ளத்தில் ஆடு, மாடுகள் தவறி விழுந்து விடுகின்றன.

சரி செய்ய வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story