பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த புரோக்கர் கைது


பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த புரோக்கர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த புரோக்கர் கைது

கோயம்புத்தூர்

பீளமேடு

கோவையில் வீடு கட்டித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.

காளப்பட்டி

கோவை ராம்நகர் செங்குப்தா நகரை சேர்ந்தவர் மணிஷா (வயது 23). இவர் அந்த பகுதியில் மழலைகள் பள்ளி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தார். அப்போது கோவை சின்னியம்பாளையம் ரோடு மைலம்பட்டியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் (44) என்பவர் மணிஷாவிடம், காளப்பட்டியில் பிளாட்டுகள் விற்பனைக்கு உள்ளது. அதில் ஒரு பிளாட்டை வாங்கி தந்து வீடு கட்டி தருவதாக தெரிவித்து உள்ளார். இதனை நம்பிய மணிஷா, மாரியப்பனின் வங்கி கணக்கில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பல்வேறு தவணைகளாக ரூ.32 லட்சம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

மோசடி

பணத்தை பெற்றுக்கொண்ட மாரியப்பன், அவர் கூறியப்படி காளப்பட்டியில் இடம் எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வீடும் கட்டித்தராமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிஷா இதுகுறித்து மாரியப்பனிடம் கேட்டுள்ளார். மேலும் அவரிடம் இடம் வாங்கி தர வேண்டும் அல்லது பணத்தை திருப்பி தர வேண்டும் என கூறினார். ஆனால் மாரியப்பன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிஷா பீளமேடு போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி அன்பு செல்வி மணிஷாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் புரோக்கர் மாரியப்பனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story