20 பேரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த அண்ணன்-தம்பி கைது


20 பேரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த அண்ணன்-தம்பி கைது
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனைகளை கிரையம் செய்து கொடுக்காமல் 20 பேரிடம் ரூ.1¾ கோடி மோசடி செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம்

விழுப்புரம்

வீட்டுமனைகள் விற்பனை

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் மணியம் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 58). அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களான மணி மகன்கள் வெங்கடேசன் (46), ராஜ்குமார் (43) ஆகியோர் வாங்கினர். பின்னர் அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு ஸ்ரீனிவாசா நகர் விரிவாக்கம் என்று பெயர் வைத்து அந்த நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்தனர். அப்போது முருகன், தனது மனைவி பத்மஸ்ரீ பெயரில் அங்கு 2 மனைப்பிரிவுகள் வாங்குவதற்காக விவரம் கேட்டார். அதற்கு வெங்கடேசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் 2 மனைப்பிரிவுகள் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் என்றனர். அதற்கு முன்பணமாக ரூ.10 லட்சத்தை முருகன் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை ஓரிரு மாதத்திற்குள் தருவதாக கூறினார்.

ரூ.1¾ கோடி மோசடி

இதையடுத்து ரூ.10 லட்சத்தை பெற்ற வெங்கடேசன், ராஜ்குமார் ஆகிய இருவரும் ஒரு மாதத்தில் மனைப்பிரிவுகளை கிரையம் செய்து கொடுப்பதாக கூறி தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள ரசீது, பணம் செலுத்தியதற்கான விவரங்களை எழுதி கையொப்பம் போட்டு முருகனிடம் கொடுத்தனர். ஆனால் முருகன் பணம் கொடுத்து 2½ ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரையிலும் மனைப்பிரிவுகளை கிரையம் செய்து கொடுக்காமல் அவர்கள் இருவரும் ஏமாற்றி வந்துள்ளனர்.

இதுகுறித்து முருகன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெங்கடேசன், ராஜ்குமார் ஆகிய இருவரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரிடமும் இதுபோன்று 19 பேர், மனைப்பிரிவு கேட்டு பணம் செலுத்தியுள்ளதும், அவர்கள் இருவரும் மனைகளை கிரையம் செய்து கொடுக்காமலும், வாங்கிய பணத்தை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுக்காமலும் ரூ.1 கோடியே 73 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

அண்ணன்-தம்பி கைது

இதையடுத்து வெங்கடேசன், ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story