கொடுமுடி அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற அண்ணன்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலி; வாலிபரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
கொடுமுடி அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்த அண்ணன்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். மேலும் தண்ணீரில் மூழ்கிய வாலிபர் ஒருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொடுமுடி
கொடுமுடி அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்த அண்ணன்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். மேலும் தண்ணீரில் மூழ்கிய வாலிபர் ஒருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அண்ணன்-தம்பி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொந்தளம்புதூர்காலனியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வெங்கம்பூர் காவிரி ஆற்றுக்கு நேற்று காலை ஊர் பொதுமக்கள் சென்றனர்.
இவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மகன்கள் குப்புராஜ் (வயது 19), சவுத்ரி (14) மற்றும் சிவக்குமார் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (18) ஆகிய 3 பேரும் மோட்டார்சைக்கிளில் சென்றிருந்தனர்.
ஆற்றில் மூழ்கினர்
அதைத்தொடர்ந்து அனைவரும் தீர்த்தம் எடுப்பதற்காக முதலில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அவர்களுடன் குப்புராஜும், சவுத்ரியும், ஜெகதீஸ்வரனும் ஆற்றில் இறங்கியுள்ளனர். ஆனால் 3 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். மேலும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இதை பார்த்த உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பிணமாக மீட்பு
இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆற்றில் இறங்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குப்புராஜும், சவுத்ரியும் அவர்கள் இழுத்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டனர்.
ஜெகதீஸ்வரன் கிடைக்கவில்லை. அவர் கதி என்ன? என்று தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்கிடையே இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோகம்
இறந்த குப்புராஜும், சவுத்ரியும் அண்ணன் தம்பி ஆவர். இதில் குப்புராஜ் ஜெகதீஸ்வரனுடன் கரூர் மாவட்டம் தென்னிலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார். சவுத்ரி கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற அண்ணன்-தம்பி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.