அண்ணனை தாக்கியவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
வக்கீல் நோட்டீசு அனுப்பியதால் ஆத்திரமடைந்து அண்ணனை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்புரோஸ் (வயது 55). இவரது தம்பி ஆரோக்கியசாமி (48). இவர்கள் பூர்வீக சொத்துக்களை இதுவரை பாகப்பிரிவினை செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர்களது சகோதரி திரவிய மேரி தனக்கு தனது சகோதரர்கள் சீர்வரிசை சரியாக செய்யாத சூழ்நிலையில் சகோதரர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் அன்புரோசும் சேர்ந்துதான் ஆரோக்கியசாமிக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கருதிய ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (43), மகன் விக்டர்பிரான்சிஸ் (20), இவர்களது உறவினர் லூர்து என்பவரின் மனைவி ஜூலி (22) ஆகியோர் அன்புரோசை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அன்புரோஸ் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியசாமியை கைது செய்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.