பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை மாதந்தோறும் வழங்க மத்திய அரசும், காவிரி ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மறுத்தால் கர்நாடகத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் அயிலை சிவசூரியன், நடராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் பெரியசாமி தொடங்கி வைத்தார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர் போராட்டத்தை முடித்து வைத்தார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.