பி.எஸ்.என்.எல். அலுவலக மாடியில் இருந்து விழுந்த அதிகாரி சாவு


பி.எஸ்.என்.எல். அலுவலக மாடியில் இருந்து விழுந்த அதிகாரி சாவு
x

கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்த அதிகாரி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

புதுச்சேரி மாநிலம் மேல்திருக்காஞ்சியை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 50). இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தலைமை கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இதற்காக பிரதீப்குமார், கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரதீப்குமார், தெலுங்கானா மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர், தெலுங்கானா சென்று வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரதீப்குமார் கடலூர் வந்துள்ளார். அப்போது கடலூர் வில்வநகரில் உள்ள தொலைதொடர்பு நிறுவன அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தின் சாவியை வாங்கிக் கொண்டு வந்துள்ளார்.

தவறி விழுந்து சாவு

இதற்கிடையே பொது மேலாளர் அலுவலகத்தின் 3-வது மாடிக்கு சென்ற பிரதீப்குமார், எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இந்த சத்தம் கேட்ட காவலாளி, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரதீப்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story