பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும்
பழையாறு துறைமுகத்தில் இருந்து திருமுல்லைவாசல் வரை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும் என மீனவர்கள், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
பழையாறு துறைமுகத்தில் இருந்து திருமுல்லைவாசல் வரை பக்கிங்காம் கால்வாயை தூர்வார வேண்டும் என மீனவர்கள், கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்கிங்காம் கால்வாய்
மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் இருந்து வேதாரண்யம் வரை பக்கிங்காம் கால்வாய் கடலோரப் பகுதிகளில் ஆறு போல் காட்சியளித்து வருகிறது. இந்த பக்கிங்காம் கால்வாய் மூலம் வேதாரண்யத்தில் உப்பு எடுக்கப்பட்டு கால்வாயின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. பழங்கால வணிகர்களுக்கு நீர்வழி போக்குவரத்தாக இந்த கால்வாய் திகழ்ந்து வந்தது. தற்போது மீனவர்கள் பக்கிங்காம் கால்வாயை படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழை வெள்ள காலங்களில் மழைநீர் தேங்காத அளவில் வடிகால் வசதி ஏற்படுத்தும் வகையிலும், கடலோர கிராம பகுதிகளின் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் பக்கிங்காம் கால்வாய் உள்ளது.
இந்த பக்கிங்காம் கால்வாய் சின்ன கொட்டாய்மேடு, பழையாறு, மடவாமேடு, கூழையாறு, திருமுல்லைவாசல், வானகிரி, கீழ மூவாரகரை, பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் இருக்கும் தடமே தெரியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பராமரிப்பு இன்றி கால்வாயின் கரைகளும் வலுவிழந்து ஆக்கிரமிக்கப்பட்டு கிடக்கிறது. எனவே கால்வாயை ஆழப்படுத்தி தூர்வார வேண்டும் என அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
இது குறித்து கூழையார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் கூறியதாவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்களின் பாதுகாப்பு அரணாக பக்கிங் கால்வாய் திகழ்ந்து வருகிறது. கடலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் இந்த கால்வாய் சென்று கொண்டிருக்கிறது. மேலும் வேதாரண்யம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, மரக்காணம், மாமல்லபுரம், சென்னை என்று பக்கிங்காம் கால்வாய் வட திசையில் பயணிக்கிறது. இப்படிப்பட்ட பக்கிங்காங் கால்வாயை மத்திய அரசு தூர் வாராமல் அலட்சியப்படுத்தி வருகிறது.
இது குறித்து பலமுறை மத்திய அரசு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மனுக்கள் அளித்தும் பக்கிங்கால் வாயை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளபடவில்லை. கால்வாயில் பல்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரும் கழிவுநீர்களை கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே பழையாறு துறைமுகத்திலிருந்து திருமுல்லைவாசல் வரை பக்கிங்காம் கால்வாய் ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி மீனவர்கள் பொதுமக்கள் பயனடையும் வகையில் தூர்வார வேண்டும் என்றார்.
தூர்வார வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயன் கூறியதாவது:- பக்கிங்காம் கால்வாய் இயற்கை சீற்றத்தில் இருந்து மீனவர்கள் விசைப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் இடமாக இருக்கிறது. இந்த கால்வாய் கடலோர கிராம பகுதிகளில் மழைக்காலங்களில் தேங்கிய வெள்ள நீர்களை வெளியேற்றும். வடிகாலாகவும் வசதியாகவும் உள்ளது. கடலோர சதுப்புநில காடுகளில் வாழும் அதிக அளவிலான உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இந்த கால்வாய் திகழ்ந்து வருகிறது. பக்கிங்காம் கால்வாயை தூர்வாரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரசு பல்வேறு திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றது. ஆனால் வடிகால் வசதிக்காக மற்றும் கடலோர போக்குவரத்து வசதிக்காகவும் உள்ள இந்த பக்கிங்க கால்வாயை கண்டு கொள்வதே இல்லை எனவே கடலோர பகுதி மக்கள் நலன் கருதி உடனடியாக கால்வாய் ஆழப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.