வேளாண்மை பட்ஜெட் தாக்கல்: நாமக்கல், ராசிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய கட்டமைப்பு வசதி-விவசாயிகள் கருத்து


வேளாண்மை பட்ஜெட் தாக்கல்: நாமக்கல், ராசிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய கட்டமைப்பு வசதி-விவசாயிகள் கருத்து
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

வேளாண்மை பட்ஜெட்டில் நாமக்கல் மற்றும் ராசிபுரம் ஒருங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வேளாண்மை பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபையில் நேற்று வேளாண்மை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் குப்புதுரை கூறியதாவது :-

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதற்கு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் கரும்புக்கு ஊக்கத்தொகையாக தமிழக அரசு டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கி வருகிறது. இதே ஊக்கத்தொகை கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டிலாவது ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பெரும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இதேபோல் ராஜா வாய்க்காலின் மீதமுள்ள சீரமைப்பு பணியை செய்வதற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாதது அனைத்து விவசாயிகளிடையேயும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டத்தில் ரூ.50 கோடி செலவில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நாமக்கல் மற்றும் ராசிபுரம் பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

சிறுதானிய மண்டலம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்:-

வேளாண்மை பட்ஜெட்டில் நாமக்கல் மாவட்டம் சிறுதானிய மண்டலத்துடன் இணைக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் கொல்லிமலை மலைவாழ் மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சம் ஆகும். மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். நாமக்கல்லை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வட்டத்துக்கு ஒரு வேளாண் விஞ்ஞானி திட்டம், இளைஞர்கள் விவசாயத்திற்கு வருவதற்கு இன்னும் அதிகப்படியான ஊக்கத்தை ஏற்படுத்தும். மொத்தத்தில் விவசாயிகளின் வாழ்விலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கிராமங்கள் தோறும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது விவசாய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும்.

கவர்ச்சிகரமான பட்ஜெட்

விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்:-

சென்ற ஆட்சி காலத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் பயிர்க்கடனை திருப்பி செலுத்தி தள்ளுபடி சலுகை பெறமுடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கும், 31-3-2021 வரை பயிர்க்கடன் தள்ளுபடிக்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் 2 ஆண்டுகால கோரிக்கை குறித்தும் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாமல் போனது காத்திருந்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

கம்பு உள்ளிட்ட தானியங்களை அரசு கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இந்த விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு தமிழகத்தில் எந்த விதமான பயனும் ஏற்பட போவதில்லை. இது கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக இருக்கிறதே தவிர, விவசாயிகள் பயன் பெறும் வகையில் எந்த திட்டங்களும் இல்லை. மாறாக அவர்களின் கடன் சுமையை மேலும் அதிகப்படுத்தும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது.

புதிய நீர்பாசன திட்டம் இல்லை

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி:-

தமிழக விவசாயிகள் விவசாயத்தை மேம்படுத்த, கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்குவது சம்பந்தமாக பெரிய அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இதேபோல் நீர் மேலாண்மை திட்டம் மூலம் அதிகப்படியாக தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில் விவசாயிகள் வளர்சிக்காகவும், புதிய நீர்பாசன திட்டம் அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.

சிறு தானிய உற்பத்தி செலவு அதிகம் ஆகிறது. கொள்முதல் விலை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் ஊட்டசத்து நிறைந்த சிறு தானிய உற்பத்தி நாளடைவில் குறைந்துவிடும். சேலம் மாவட்ட பகுதியில் கூட்டுறவுத்துறை மூலம் மரவள்ளி கிழங்கு, ஜவ்வரிசி ஆலை அமைக்க வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. கரும்பு, நெல் மற்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்வது குறித்த அறிவிப்பும், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏற்றவாறு இடம் பெறவில்லை. எனவே இந்த பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரவேற்கத்தக்கது

திருச்செங்கோட்டை சேர்ந்த விவசாயி நடேசன்:-

சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் ரூ.5 லட்சம் பரிசுடன் விருது வழங்கப்படும். இதேபோல் நாமக்கல், ராசிபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலமாக உருவாக்கி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்கது.

மாநில அரசின் திட்டங்கள் அடிமட்ட விவசாயிகளுக்கு சென்றடையும் நோக்கில் அரசு அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். எந்திரமயமாக்கல் என்பது விவசாயத்தில் தற்போது அவசியமாக உள்ளது. எந்திரங்களை விவசாயிகள் வாங்கும்போது, அதற்கு உண்டான மானியம் குறைந்த அளவிலே உள்ளது. அதை 50 சதவீதம் உயர்த்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story