பட்ஜெட் எதிரொலி: புதிய உச்சம் தொட்ட தங்க விலை - ஒரு சவரன் ரூ43,800க்கு விற்பனை
ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டுள்ளது. ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
தங்கம் விலை தினமும் ஒரு விலை என்ற அடிப்படையில், ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும் கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்வை நோக்கியே தங்கம் விலை பயணித்தது. இதனால் கடந்த மாதத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.41 ஆயிரம், ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்ற நிலையை கடந்து இருந்தது.
இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என கருதியதால், தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினார்கள். இதனால் கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதன் விலை சற்று குறைந்து இருந்தது.
நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.43,800க்கு விற்பனையாகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.5,475க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.30 உயர்ந்து ரூ77.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிப்பால் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
கொரோனா காலத்தில் 2020-ல் ஆகஸ்ட் 70-ம் ஹ்டேதி ஒரு சவரன் ரூ.43,360 ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது.
2020 ஆக்ஸ்ட் 7-ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420க்கு விற்பனையானது.
'மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் பார்வை சென்றதன் விளைவால், தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் விலையில் அதிரடி மாற்றம் இருக்கும்' என்று தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.