திருப்பூரில் 100 அரங்குகளுடன் தொடங்கிய 'பில்ட் எக்ஸ்போ'-23 கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.


திருப்பூரில் 100 அரங்குகளுடன் தொடங்கிய பில்ட் எக்ஸ்போ-23 கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.
x
தினத்தந்தி 7 July 2023 10:08 PM IST (Updated: 9 July 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 100 அரங்குகளுடன் தொடங்கிய 'பில்ட் எக்ஸ்போ'-23 கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.

திருப்பூர்

கண்காட்சி

திருப்பூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் 'பில்ட் எக்ஸ்போ'-23 என்கிற இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி திருப்பூர்-காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் நேற்று காலை தொடங்கியது. தொடக்கவிழா நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணி வரவேற்றார். கண்காட்சி தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் ஆகியோர் கண்காட்சி விளக்க உரையாற்றினார்கள். தேசிய வர்த்தக வாரிய உறுப்பினர் ராஜா சண்முகம், தொழிலதிபர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை திறந்து வைத்து பேசும்போது " தமிழ் நாட்டில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களை கட்டியதில் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. திருப்பூர் மாநகரை பொறுத்தவரை உலக வரைபடத்தில் தனி அடையாளத்தை பெற்றுள்ளோம். அதற்கு பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். திருப்பூரை முதன்மையான மாநகராட்சி என்ற அந்தஸ்தை பெற உங்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும் என்றார்.

முன்னணி கட்டிடகலை நிபுணர் பிரசன்னா பர்வதிகர் அரங்குகளை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். முடிவில் சங்க செயலாளர் திருமலைசாமி நன்றி கூறினார். இதில் சங்க பொருளாளர் குணசேகரன், கண்காட்சி செயலாளர் சபரிநாதன், முன்னாள் தலைவர்களும், மூத்த பொறியாளர்களுமான ஹேமந்த்ராம், பால்ராஜ், பெரியசாமி, ராஜசேகரன், சிவன்பாலசுப்பிரமணியம், தணிகைவேல், துளசிராம், ராஜமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: -

முன்னணி நிறுவனங்கள்

கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த 100 முன்னணி கட்டுமானப் பொருட்கள், கட்டிட உள் மற்றும் வெளி அலங்கார பொருட்களின் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. மேலும் ஸ்மார்ட் ஹோம், ஹோம் தியேட்டர், கிச்சன்வேர்ஸ், ஏ.சி., அலங்கார விளக்குகள், மார்பிள், டைல்ஸ், பசுமை தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மெத்தைகள் உள்ளிட்ட அரங்குகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதேபோல் ரியல் எஸ்டேட் புரமோட்டர்ஸ் மற்றும் வங்கிக் கடன் வசதி வழங்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் அரங்குகளும் உள்ளன. இந்த கண்காட்சி வரும் 10-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கண்காட்சிக்கான அனுமதி இலவசம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story