புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்


கரித்துகள், கரும்புச்சக்கை துகள் வெளியேறியதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

சர்க்கரை ஆலை

கரூர் மாவட்டம் புகழூரில் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சுற்றியுள்ள புகழூர் நால்ரோடு, தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், செம்படாபாளையம், கந்தம்பாளையம், திருக்காடுதுறை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேறும் கரித்துகள், கரும்புச்சக்கை துகள் போன்றவை காற்றின் மூலம் பறந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் விழுந்துவருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்து வந்தனர்.

கண் எரிச்சலால் அவதி

சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள் மற்றும் கரும்புச்சக்கை துகள் வாகன ஓட்டிகளின் கண்களில் படுவதால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதேபோல் இந்த துகள்களை சுவாசிக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டு வந்தது.

இந்த ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுநீர் இரவு நேரங்களில் புகழூர் வாய்க்காலில் கலப்பதால் விவசாய பயிர்களும் பாதிப்படைந்து வந்தன. மேலும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் கால்நடைகளுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து புகழூர் நகராட்சி சார்பில் பல முறை ஆலை நிர்வாகத்திடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமும் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த புகழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று புகழூர் சர்க்கரை ஆலையின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து சர்க்கரை ஆலை வழியாக கரூர் செல்லும் வாகனங்களும், கரூரில் இருந்து சர்க்கரை ஆலை வழியாக பரமத்தி வேலூர் செல்லும் வாகனங்களும் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், தாசில்தார் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் வினோதினி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, புகழூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையின் பொது மேலாளர் செந்தில் இனியன், உற்பத்தி மேலாளர் வின்சென்ட் பால் ஆகியோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையின் போது இன்று (புதன்கிழமை) காலை முதல் சர்க்கரை ஆலை இயங்குவதை நிறுத்தி புகையின் மூலம் வெளியேறும் கரித்துகள் மற்றும் கரும்புச்சக்கை துகள் வெளியே வராமல் சீர் செய்யப்படும். அதேபோல் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தம் செய்து கால்வாயில் விடப்படும். சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் புகையினை பில்ட்டர் செய்து குழாயின் மூலம் மேலே அனுப்பப்படும்.

சர்க்கரை ஆலை சுற்றுவட்டார பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை உடனடியாக சரி செய்யப்படும். சர்க்கரை ஆலையின் லாபத்தில் 2 சதவீதம் பொது சேவை செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் இனி வரும் நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.


Next Story