புகழூர் நகராட்சி கூட்டம்
புகழூர் நகராட்சி கூட்டம் நடைபெற்றது.
புகழூர் நகராட்சி கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையர் பால்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட தெரு மின் விளக்குகள், மினிபவர் பல்புகளை சரிசெய்வதற்கும், சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்காக பொருட்கள் கொள்முதல் செய்யவும் தலா ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது, 2,11, 12-வது வார்டு பகுதி, கட்சியப்ப காலனி, ஹைஸ்கூல் வீதி பகுதிகளில் சாலைகளை சீரமைக்க தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது, அன்னை நகர் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் அமைக்க ரூ.7½ லட்சமும், வார சந்தையில் வியாபார கடைகளை மேம்படுத்தல் பணிக்காக ரூ.9½ லட்சமும், தட்டாங்காடு சாலையில் உள்ள மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிக்காக ரூ.4½ லட்சமும், மலைநகர் மற்றும் புகழிநகர் பகுதியில் மழை நீர் வடிகால் பராமரிப்பு பணி செய்வதற்கு ரூ.6½ லட்சமும், வாரச்சந்தையில் தரைத்தளம் மேம்படுத்தல் பணிக்காக, காந்தி நகர் சமுதாய கழிப்பிடம் அருகில் தரைத்தளம் அமைத்தல், தெருக்களில் உள்ள மழை நீர் வடிகால் மராமத்து பணி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலா ரூ.9½ லட்சம் நிதி ஒதுக்குவது என்பன உள்பட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகராட்சி உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.