200 அரங்குகளுடன் கட்டுமான பொருட்கள் கண்காட்சி
திருப்பூரில் 200 அரங்குகளுடன் கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது.
கட்டுமான பொருட்கள் கண்காட்சி
திருப்பூர் சிவில் என்ஜினீயர் அசோசியேசன் சார்பில் 18-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருப்பூரில் தொடங்குகிறது. இதுகுறித்து சங்க தலைவர் ஜெயராமன், கண்காட்சி தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-
திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் கடந்த 24 ஆண்டுகளாக, பொதுமக்களுக்கும், பொறியாளர்களுக்கும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த அமைப்பில் 250 பொறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும்.
14-ந்தேதி தொடங்குகிறது
இந்த நிலையில் திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் 18-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி திருப்பூர் தாராபுரம் ரோடு, வித்யாகார்த்தி திருமண மண்டபத்தில் வருகிற 14-ந்தேதி கண்காட்சி தொடக்கவிழா காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு சங்கத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்குகிறார். செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசுகிறார்.
கண்காட்சித்தலைவர் ராதாகிருஷ்ணன் விழா அறிக்கை வாசிக்கிறார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். பொறியியல் பொக்கிஷம் 2023 கண்காட்சி மலரை திருப்பூர் எம்.பி.சுப்பராயன் வெளியிடமேயர் தினேஷ்குமார் ெபற்றுக்கொள்கிறார்.
200 நிறுவனங்களின் அரங்குகள்
திருப்பூர் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் கைபேசி செயலியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் தொடங்கி வைக்கிறார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப்பொறியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜேஷ், மாநில துணைத்தலைவர் விஜயாபானு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். முடிவில் கண்காட்சி செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறுகிறார்.
இந்த கண்காட்சியில் தமிழகம் மற்றும் இ்ந்தியாவில் உள்ள கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிப்பிலும், விற்பனையிலும் சிறந்து விளங்கும் 200 நிறுவனங்கள் அரங்குகள் இடம் பெறுகிறது. கட்டிடங்கள் கட்டுவதற்கு செலவு குறைவாக ஆகக்கூடிய புதிய வகையான பொருட்கள் ஏராளமாக உள்ளது.
அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில்
கட்டிடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்களுக்கு நேரமும், அதிக செலவும் குறையும். கட்டிடம் கட்டி கொண்டிருப்பவர்களுக்கும், இனி கட்டிடம் கட்ட உள்ளவர்களுக்கும் இந்த கண்காட்சி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். கண்காட்சி 14-ந்தேதி தொடங்கி 17-ந்தேதி வரை 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.
இக்கண்காட்சியில் தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அனுமதி இலவசம். மேலும் 4 நாட்களும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம், 14-ந்தேதி இலவச கண்சிகிச்சை முகாம், 15, 16-ந்தேதிகளில் இலவச ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை முகாம் நடைபெறும்.
சங்க செயலாளர் பிரகாஷ், துணைத்தலைவர் குமார் சண்முகம், கண்காட்சி செயலாளர் ராஜசேகரன், பொருளாளர் மகேஷ்குமார், கண்காட்சி பொறுப்பாளர்கள் ஜனார்த்தனன், பாலமுருகன், நித்யானந்தன், சதீஸ்பாபு, கிருபாகரன், விஜயகுமார் மற்றும் கண்காட்சி குழுவினர் கண்காட்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உடனடி முன்னாள் தலைவர் ஸ்டாலின் பாரதி மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.