அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வருமா?


அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வருமா?
x
திருப்பூர்


உடுமலை ருத்திரப்பா நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாட்டுக்கு வருமா? என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்

பருவநிலை, தட்பவெட்ப நிலை மாறுபாடு, எதிர்பாராமல் நடக்கும் விபத்துகள், தொற்று மற்றும் உயிர்கொல்லி நோய்களில் இருந்து பொதுமக்களை காப்பாற்றி ஆரோக்கியமான வாழ்வை அளிப்பதில் சுகாதாரத் துறையின் பங்கு முக்கியமானதாகும். ஏழை-எளிய நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் பயன் பெறும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஆங்காங்கே அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் மூலமாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் கட்டணமில்லா மருத்துவ சேவையை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் ஆரம்ப நிலை தொற்று நோய்கள் மற்றும் முதலுதவி சிகிச்சை பெற்று பயனடையும் வகையில் ஆங்காங்கே கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாக வருகின்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் உடுமலையில் ருத்திரப்பா நகர் நுழைவுப் பகுதியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவ சேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

அரசுக்கு அவப்பெயர்

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

உடுமலையில் ருத்திரப்பா நகரின் நுழைவுப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அதன் பின்பு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டிடம் கட்டப்பட்டதற்கான நோக்கமும் மக்களின் வரிப்பணமும் வீணாகி வருகிறது. மேலும் கட்டிடத்தில் தெரு நாய்கள் தஞ்சம் அடைந்து உள்ளதுடன் இயற்கை உபாதைகளை கழித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிற தற்போதைய சூழலில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பங்கு முக்கியமானதாகும்.

ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் நல்ல முறையில் இயங்கினால் தொற்று நோய்கள் கட்டுக்குள் வரும். பொதுமக்களும் உடுமலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று நீண்ட வரிசையில் கால் கடுக்க நோயின் தாக்கத்தோடு காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் குறித்த காலத்தில் பொதுமக்களால் சேவையை பெறமுடியாத நிலையும் உள்ளது. எனவே உடுமலையில் ருத்திரப்பா நகரின் நுழைவுப்பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story