மூங்கில் குத்து முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்


சேலம்

கொண்டலாம்பட்டி:-

நெய்க்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கண்டுகளித்தனர்.

கோவில் திருவிழா

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மூங்கில் குத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதத்தில் வரும் முதல் வியாழக்கிழமை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவையொட்டி எருதாட்டம் நடைபெறுவது உண்டு. இதனை கொண்டாடும் வகையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்கிருந்து எருதுகளை பக்தர்கள் பிடித்து வந்தனர்.

இதில் பக்தர்கள் 19 குழுக்களாக சென்று மொத்தம் 95 மாடுகளை அழைத்து வந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்ட எருதுகளை இளம்பிள்ளை அருகே காடையாம்பட்டி முனியப்பன்கோவிலில் நிறுத்தி பூஜைகள்செய்தனர்.

எருதாட்டம்

பின்னர் அங்கு பொது கிடா விருந்து வைக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து நெய்க்காரப்பட்டியில் உள்ள மூங்கில் குத்து முனியப்பன் கோவிலுக்கு ஊர்வலமாக எருதுகளை அழைத்து வந்தனர். தொடர்ந்து நேற்று மதியம் 12 மணி அளவில் கோவில் வீட்டில் இருந்து பூஜை செய்யப்பட்டு காளைகளுடன் மாரியம்மன் கோவில் மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு எருதாட்டம் நடந்தது.

எருதாட்டத்தை பாரப்பட்டி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதனை காண ஏராளமானவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.


Next Story