கோவில் திருவிழாவில் எருது ஓட்டம்


கோவில் திருவிழாவில் எருது ஓட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2023 8:45 PM GMT (Updated: 28 Sep 2023 8:45 PM GMT)

சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில் பாப்பம்மாள், கன்னக்கள் கோவில் திருவிழாவில் எருது ஓட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே விராலிப்பட்டியில் பாப்பம்மாள், கன்னக்கள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாலை கும்பிடு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா, கடந்த 26-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் நேற்று நடந்தது.

இதையொட்டி 14 மந்தைகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கோவில் காளைகள் அழைத்து வரப்பட்டன. பின்னர் நடந்த எருது சந்திப்பு நிகழ்ச்சியில், பாரம்பரிய முறையில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன்பிறகு தவசிமடை சிவன் கோவில் அருகே, கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொத்து கொம்பு பகுதிக்கு காளைகள் கொண்டு செல்லப்பட்டன.

அங்கிருந்து தோரணவாயிலை நோக்கி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து ஓடி வந்தன. இதில் முதலாவதாக வந்த காளைக்கு மஞ்சள் தூவி, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த விழாவில் திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story