மாட்டு வண்டி எல்கை பந்தயம்
மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே நம்பூரணிப்பட்டி அம்பேத்கர் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 18 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவாக நடத்தப்பட்டது. பந்தயம் நம்பூரணிப்பட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.
பெரிய மாடு பிரிவு
முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 5 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள், 2-ம் பரிசு ரத்தினகோட்டை மஞ்சள்கரை அடைக்கலம் காத்த அய்யனார் பதினெட்டாம்படி கருப்பர், 3-ம் பரிசு மூக்குடி வேலவன், 4-ம் பரிசு ஆத்தங்குடி கண்ணாத்தாள் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.
ரொக்கம் வழங்கல்
இதனைதொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 13 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசு சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் ஹரிகிருஷ்ணன், 2-ம் பரிசு கே.புதுப்பட்டி கலை, 3-ம் பரிசு கே.புதுப்பட்டி கரைமேல் அய்யனார், 4-ம் பரிசு ஓணாங்குடி அசரப் அலி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன. இறுதியில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கம் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் திரண்டு இருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.