மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், நாகராஜ், விஜி, சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளுக்கென மணல் குவாரி திறக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி, திருவிடைமருதூர் தாலுகா முள்ளங்குடியில் உள்ள மணல் குவாரியை ஒரு வார காலத்தில் திறப்பது எனவும், பாபநாசம் தாலுகா நடுப்படுகை குவாரியை 15 தினங்களுக்குள் திறப்பது எனவும், கும்பகோணம் தாலுகா கொத்தங்குடியில் அமைய உள்ள குவாரி தொடர்பாக மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அதிகாரி உறுதி அளித்தபடி மாட்டுவண்டிகளுக்கென மணல் குவாரி திறக்கப்படவில்லை என்றால், லாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மணல் குவாரியில் மணல் எடுக்கப்படும் என, சி.ஐ.டி.யூ. மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.