ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளைகள், காளையர்கள்- விடுமுறை நாட்களில் கண்மாய், தரிசு நிலங்களில் தீவிர பயிற்சி


ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக கண்மாய்கள், தரிசு நிலங்களில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டனர்.

மதுரை

ஜல்லிக்கட்டுக்கு காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர். விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக கண்மாய்கள், தரிசு நிலங்களில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டு

தமிழக பாரம்பரிய விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு பிரதான இடத்தை பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு பல நாட்கள் போராட்டம் நடந்தது. அதன் பலனாக தற்போதைய இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டின் மீதான ஆர்வம் பலமடங்கு அதிகரித்துள்ளது. நகரில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆசைப்படுகின்றனர்.

அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பிரபலமான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடக்கும்போது முன்பெல்லாம் 500 காளைகள் பங்கேற்றாலே அரிதாக பார்ப்பார்கள். சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த ஆண்டு பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஆயிரம் காளைகள் பங்கேற்றன. பல காளைகளுக்கு டோக்கன் கிடைக்காமல் அவை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியாமல் திரும்பிச்சென்ற சம்பவங்களும் அரங்கேறின.

பிற மாவட்டங்களிலும் ஆர்வம்

தென் மாவட்டங்களில்தான் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடந்து வந்தன. 2017-ம் ஆண்டுக்கு பின்பு கோவை, திருப்பூர், ஈரோடு என மேற்கு மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு ஆர்வத்துடன் நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் காணும் பொங்கல் தினத்தன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

விடுமுறையில் தீவிர பயிற்சி

இது ஒருபுறம் இருக்க, இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் தங்கள் காளைகளை பங்கேற்கச்செய்யும் வகையில் அவற்றுக்கு தீவிர பயிற்சிகளை உரிமையாளர்கள் அளித்து வருகின்றனர். இதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பல், கும்பல்களாக காளைகளை பிடித்துக் கொண்டு கண்மாய்களிலும், தரிசு நிலங்களிலும் இளைஞர்கள் கூட்டத்தை காண முடிகிறது. தரிசு நிலங்களில் தற்காலிக வாடிவாசல் அமைத்து, காளைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அதேபோல கண்மாய்களில் நீச்சல் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

அதேபோல மாடுபிடி வீரர்களும் குரூப், குரூப்பாக கூடி, காளைகளை வாடிவாசலில் லாவகமாக மடக்குவதற்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். கடந்த 2 நாளாக இந்த பயிற்சிகள் பொதும்பு, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே தீவிரமாக நடந்ததை காண முடிந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டு எப்போது தொடங்கும் என்ற ஆவலுடன் அனைத்து தரப்பினரும் தயாராகி வருவதை காண முடிந்தது.


Next Story