பொள்ளாச்சியில் விற்பனைக்கு குவிந்த கரும்புகள்
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன. வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சியில் கரும்புகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன. வரத்து குறைந்ததால், விலை அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கிருந்து ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பக்கத்து மாநிலமான கேரளாவுக்கு கரும்புகள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மார்க்கெட்டுக்கு கரும்புகள் கொண்டு வரப்படும். ஆனால், இந்த ஆண்டு நேற்று முன்தினம் தான் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. வரத்து குறைவால் விலை உயர்ந்து உள்ளது. இதுகுறித்து கரும்பு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-
விலை அதிகரிப்பு
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சேலம், நத்தம் பகுதிகளில் இருந்து கரும்புகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுக்கு 15 லோடு கரும்புகள் கொண்டு வரப்படும். ஒரு லோடுக்கு 5 ஆயிரம் கரும்புகள் லாரியில் வரும். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்புகள் கொண்டு வரப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறை ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பில் வழங்குவதற்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு கரும்புகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் இன்று (நேற்று) தான் கரும்புகள் கொண்டு வரப்பட்டன. அதுவும் 2 லோடு தான் கரும்புகள் வந்து உள்ளன.
இதற்கிடையில் வாகனங்களில் கரும்புகள் கொண்டு வருவதற்கு போக்குவரத்து செலவு அதிகரித்து விட்டது. வரத்து குறைவு, போக்குவரத்து செலவு அதிகரிப்பு காரணமாக 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.