வீடு புகுந்து திருடிய கள்ளக்காதல் ஜோடி கைது


சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அருகே வீடு புகுந்து திருடிய கள்ளக்காதல் ஜோடி கைதுசெய்யப்பட்டனர். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நகைகள் கொள்ளை

எடப்பாடி - ஜலகண்டாபுரம் ரோடு அருகே பெருமாள் கோவில் காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மாதையன். இவருடைய மனைவி சுந்தராம்பாள். இவர், திருவண்ணாமலையில் உள்ள தன்னுடைய மகனை பார்க்க சென்று இருந்தார்.

இதற்கிடையே அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த எல்.இ.டி. டி.வி., தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து சுந்தராம்பாள் கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு ஆணும், பெண்ணும் சுந்தராம்பாள் வீட்டுக்குள் சென்று வருவது தெரிய வந்தது.

கைது

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது வெளியான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமம் பாப்பம்பாடியை அடுத்த சோழவந்தான் வளவு பகுதியை சேர்ந்த சக்திவேல் (24), ஓமலூரை அடுத்த தாசநாயக்கன்பட்டி காலனி பகுதியை சேர்ந்த மணி மனைவி சியாமளாதேவி (27) என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சக்திவேலுக்கும், சியாமளா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அவர்கள் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் புகுந்து திருடியதாகவும், பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து எல்.இ.டி. டி.வி., தங்க நகைகள் மீட்கப்பட்டன. கைதான இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story