இடிந்து விழும் நிலையில் மயான கொட்டகை


இடிந்து விழும் நிலையில் மயான கொட்டகை
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:45 PM GMT)

திருக்கருக்காவூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மயான கொட்டகையை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தரப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

திருக்கருக்காவூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மயான கொட்டகையை அகற்றி விட்டு புதிதாக கட்டித்தரப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த மயான கொட்டகை

கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர் ஊராட்சி கிளாத்தோப்பு கிராமத்தில் மயான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த மயான கொட்டகை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது.

கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இந்த மயான கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபாய நிலையில் உள்ளது

இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- திருக்கருக்காவூர் ஊராட்சி கிளாத் தோப்பு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் யாராவது இறந்தால் அவரது உடலை தகனம் செய்ய இந்த பகுதியில் மயான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் இறந்தவரின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்லும் போது மயான கொட்டகை கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

புதிதாக கட்டித்தர வேண்டும்

மேலும் மயானத்திற்கு செல்லும் சாலையும் சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் இந்த சாலை வழியாக இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக மயான கொட்டகை சேதமடைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மயான கொட்டகை மற்றும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.


Next Story