உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்பு

கோவையில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டது. அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை
கோவையில் உடல் கருகிய நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டது. அவர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் பிணம்
கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு இடத்தில் இருந்து நேற்று மதியம் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த இடத்தில் உள்ள குடிசைக்குள் இருந்த கட்டிலுக்கு அடியில் உடல் பாதி எரிந்து அழுகிய நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் பிணம் கிடப்பது தெரியவந்தது. மேலும் அருகில் மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் கிடந்தன. இதையடுத்து ேபாலீசார் தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் கிடைத்த தடயங்களை சேகரித்தனர்.
பாலியல் வன்கொடுமை?
இதைத்தொடர்ந்து கருகிய நிலையில் கிடந்த அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 35 வயது முதல் 40 வயது இருக்கலாம். சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரத்தினபுரி போலீசார், அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






