பா.ஜனதா கட்சி கொடிக்கு தீ வைப்பு; போலீசார் விசாரணை
கடையம் அருகே பா.ஜனதா கட்சி கொடிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தில் பஸ் நிலையம் அருகே தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பா.ஜனதா கட்சி கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசும் அங்கு வந்து பார்வையிட்டார்.
இதே கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா கட்சியின் கொடிக்கம்பத்தை அப்பகுதியை சேர்ந்த இருவர் குடிபோதையில் கல்லால் உடைத்தனர். கடந்த 9-ந்தேதி பா.ஜனதா கொடி மர்மநபர்களால் கம்பத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு இருந்தது. அதை மீண்டும் ஏற்றியிருந்த நிலையில், மர்மநபர்கள் அதை இறக்கி தீ வைத்து சென்றது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் கொடுத்த புகாரின் பேரில், ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.