தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
வால்பாறையில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43), தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் மதுகுடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி பாலகிருஷ்ணன், தனது மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தீக்குச்சியை பற்ற வைத்தபோது, பாலகிருஷ்ணன் உடலில் தீப்பிடித்தது. இதையடுத்து அவர் வலியில் அலறி துடித்தார். உடனே அவரது மனைவி, அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.