சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; கலெக்டர் அறிவுறுத்தல்
x

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயம்

தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பொது மக்கள் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மாசற்ற தீபாவளி

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story