ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது


ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது
x

ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது என்று டி.ஜி.பி.யிடம் பாராட்டு பெற்ற மேட்டுப்பாளையம் பெண் போலீஸ் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்


ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வது ஆத்ம திருப்தி அளிக்கிறது என்று டி.ஜி.பி.யிடம் பாராட்டு பெற்ற மேட்டுப்பாளையம் பெண் போலீஸ் தெரிவித்தார்.

பெண் போலீசுக்கு பாராட்டு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் ஆமினா. இவர் தனது போலீஸ்துறை பணியுடன் சேர்ந்து சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத உடல்களை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நல்லடக்கம் செய்து உள்ளார்.

இவர் செய்து வரும் இந்த சேவை காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளது. இதை அறிந்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பெண் போலீஸ் ஆமினாவை நேரில் வரவழைத்து அவருக்கு வெகுமதியுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கி அவருடைய சேவையை பாராட்டினார்.

இதுகுறித்து பெண் போலீஸ் ஆமினா கூறியதாவது:-

ஆதரவற்றோரின் உடல்கள்

நான் காவல்துறையில் பணிக்கு வருவதற்கு முன்பு பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தேன். அப்போது குழந்தைகளின் முகத்தில் ஒரு பரவசம் ஏற்பட்டதை உணர்ந்தேன். எனவே இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகமானது. பின்னர் போலீசில் பணியில் சேர்ந்த பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டேன். இங்கு அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழக்கும் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி வழங்கப்பட்டது. அதில் சில ஆதரவற்றோரின் உடல்கள் வரும். அவர்கள் யாரென்றே அடையாளம் தெரியாது. அந்த உடல்களை அடக்கம் செய்யக்கூட யாரும் முன்வர மாட்டார்கள்.

ஆத்ம திருப்தி அளிக்கிறது

எனவே அந்த உடல்களை தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நானே அடக்கம் செய்ய தொடங்கினேன். இதில் கோவை ஆத்துப்பாலத்தில் உள்ள மயானத்தில் 50 உடல்கள், மேட்டுப்பாளையம் எஸ்.என்.நகரில் உள்ள நந்தவனத்தில் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் என்று கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்து உள்ளேன்.

சிறு வயதிலேயே எனக்கு உதவும் மனப்பான்மை இருப்பதால் தற்போது ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறது. அத்துடன் இன்னும் அதிகமாக பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையும் ஏற்பட்டு வருகிறது. எனக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என்ற ஈடுபாடு இருக்கும். எனவே அந்த வகையில் நான் எனது பணியை முழு ஈடுபட்டுடன் செய்து வருகிறேன். இதற்கு எனது உயர் அதிகாரிகள் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாராட்டு குவிகிறது

பெண் போலீசான ஆமினாவின் சொந்த ஊர் காரமடை ஆகும். அவர் கடந்த 2010-ல் போலீஸ் பணியில் சேர்ந்தார். கோவைப்புதூரில் உள்ள 4-வது சிறப்பு பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய பிறகு கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

ஆதரவற்றவர்களின் உடல் என்றால் அதை தொடக்கூட ஒரு நிமிடம் யோசிக்கும் நிலையில் பலர் உண்டு. ஆனால் அதை யோசிக்காமல், அதை தனது கடமை என்று நினைத்து பட்டாம்பூச்சி போன்று சிட்டாக பறந்து அந்த உடல்களை அடக்கம் செய்து வரும் பெண் போலீஸ் ஆமினாவை போலீசார் மட்டுமல்லாமல் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவரின் சேவையை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஆமினாவை அழைத்து பாராட்டிய நிலையில், தற்போது தமிழக டி.ஜி.பி. நேரில் அழைத்து பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story