டவுன் பஸ்களை நிறுத்தாமல் செல்லும் டிரைவர்கள்


டவுன் பஸ்களை நிறுத்தாமல் செல்லும் டிரைவர்கள்
x

திருப்பூரில் பெண்கள் காத்து நிற்கும் பஸ் நிறுத்தங்களில் டவுன் பஸ்களை நிறுத்தாமல் டிரைவர்கள் செல்வதாகவும், இதையடுத்து போராட்டம் நடத்தப்போவதாகவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் பெண்கள் காத்து நிற்கும் பஸ் நிறுத்தங்களில் டவுன் பஸ்களை நிறுத்தாமல் டிரைவர்கள் செல்வதாகவும், இதையடுத்து போராட்டம் நடத்தப்போவதாகவும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

இலவச பயணம்

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்ற திட்டத்தை அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாநகரில் பெரும்பாலான அரசு டவுன் பஸ்களில் இலவச பயணத்தை காரணம் காட்டி, பஸ் நிறுத்தங்களில் டிரைவர்கள் பஸ்களை நிறுத்தாமலேயே செல்கின்றனர். ஒருசில டிரைவர்கள் பெண்களை ஏற்ற தயக்கம் காட்டுவதுடன், அதற்கு வசதியாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரத்திற்கு முன்பாகவும், நிறுத்தத்தை தாண்டியும் நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்போது பஸ்சில் ஏறுவதற்காக பெண்கள் ஓடினால், அதை பார்க்கும் டிரைவர்கள் அந்த பெண்களை ஏற்றாமல் உடடினயாக அங்கிருந்து பஸ்சை கிளப்பி விடுகின்றனர். அதையும் தாண்டி முயற்சி செய்து பஸ்சில் ஏறினால் படிக்கட்டில் ஏறும்போதே பஸ்சை டிரைவர்கள் எடுத்து விடுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கிறார்கள்.

போராட்டம்

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு மார்க்கமாக காலை நேரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாலையில் பெண்கள் மற்றும் மாணவிகள் வீடு திரும்பும்போதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதேபோல் டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்யும் பெண்களிடம் கண்டக்டர்கள் மரியாதை குறைவாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை. எனவே இதே நிலை நீடித்தால் பெண்களை ஏற்றாமல் செல்லும் பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும், பெண்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளும் அரசு டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை

தமிழகத்தில் பெண்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொடர்ந்து தமிழக அரசு அக்கறை காட்டி வரும் நிலையில் அரசின் உத்தரவை மதிக்காத டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Related Tags :
Next Story