பஸ்-ஆட்டோ-லாரி மோதல்; 20 பெண்கள் காயம்
திண்டிவனம் அருகே பஸ்-ஆட்டோ-லாரி மோதிய விபத்தில் 20 பெண்கள் காயமடைந்தனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் அருகே உள்ள கோலியனூர், ஓட்டேரிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சக்தி மாலை அணிந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று காலை தனியார் பஸ்சில் புறப்பட்டனர்.
திண்டிவனம் அருகே சாரத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் லாரி மீது மோதியது. இந்த இடிபாடுகளில் ஆட்டோ சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மல்லிகா(வயது 70), முனியம்மாள்(70), பஸ்சில் பயணம் செய்த சரண்யா(30), பச்சையம்மாள்(48), மகாலட்சுமி(38), வசந்தா(45), செல்வி(51), கலா(51), கலைச்செல்வி(33), சரண்யா(30), சுமதி(41) உள்பட 20 பெண்கள் காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினரும், ஒலக்கூர் போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.