ஆட்டோ மீது பஸ் மோதல்; டிரைவர் பலி


ஆட்டோ மீது பஸ் மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி காயத்திரி (24). இவர்களுக்கு 4 மாதமான மாதேஸ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் முருகன் தனது மனைவி காயத்திரியின் வேலை தொடர்பாக கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டு நாகர்கோவில் திரும்பினார். பின்னர், வடக்கூருக்கு திரும்புவதற்காக முருகன் ஒரு ஆட்டோவில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை தேரேக்கால்புதூரை சேர்ந்த நாகராஜன்(52) என்பவர் ஓட்டினார்.

அரசு பஸ் மோதியது

தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வந்தபோது எதிரே வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த முருகன், அவரது மனைவி காயத்திரி, குழந்தை மற்றும் ஆட்டோ டிரைவர் நாகராஜன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயமடைந்த முருகன், அவரது மனைவி, மகன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், ஆட்டோ டிரைவர் நாகராஜனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு நாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சாவு

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் நாகராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான செண்பகராமன்புதூர் முத்துநகரை சேர்ந்த பெருமாள் (48) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த ஆட்டோ டிரைவர் நாகராஜனுக்கு, நாகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story