கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதல்; 10 பேர் காயம்
சோளிங்கர் அருகே கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர்கள் 10 பேர் காயம் அடைந்தனர்.
கன்டெய்னர் லாரி மீது பஸ் மோதல்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் சோளிங்கர்-அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணத்தை நோக்கி தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தனியார் கம்பெனி பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்தவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் டிரைவர் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பனி மூட்டம்
அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த சோளிங்கர் போலீசார், சாலையின் குறுக்கே நின்ற பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இதுகுறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.