டேங்கர் லாரி மீது பஸ் மோதல்;மாணவர்கள் உள்பட 22 பேர் காயம்
ராசிபுரம் அருகே டேங்கர் லாரி மீது தனியார் பஸ் மோதி மாணவர்கள் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்
லாரி மீது மோதல்
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று நாமக்கல் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. பஸ்சை லோகேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த தனியார் பஸ் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர் அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் டேங்கர் லாரி ஒன்று நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை பாபு என்பவர் ஓட்டிச் சென்றார்.
லாரிக்கு முன்னால் நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியதாக கூறப்படுகிறது. அப்போது டேங்கர் லாரியின் டிரைவர் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்னால் சென்ற அந்த தனியார் பஸ் டேங்கர் லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
22 பேர் காயம்
இதில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மாணவி சங்கீதாபிரியா (வயது 21), நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரி மருத்துவ மாணவி கிருத்திகா (19), சரண்யா (20), பிரவின்குமார் (19), திருச்சி அரசு கல்லூரி மாணவர் சவுந்தர் (19) உள்பட 22 பேர் காயம் அடைந்தனர். இதில் பழனியம்மாள், சரோஜா, சுமதி உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் லோகேஷ், டேங்கர் லாரி டிரைவர் பாபு ஆகியோர் காயம் இன்றி தப்பினர். ராசிபுரம் தாசில்தார் சுரேஷ் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்து காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
விபத்தின் காரணமாக சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.