பஸ்கள் மோதல்; பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்


பஸ்கள் மோதல்; பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடி அருகே பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் பெண் போலீஸ் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

தென்காசி

புளியங்குடி:

செங்கோட்டையில் இருந்து நேற்று மாலை மதுரை நோக்கி அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. பஸ்சை மதுரையைச் சேர்ந்த ஆனந்தன் (வயது 47) என்பவர் ஓட்டினார். புளியங்குடி அருகே நவ்வாச்சாலை அருகில் உள்ள ஒரு வளைவில் சென்றபோது அந்த வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து செங்கோட்டை நோக்கி தனியார் பஸ் வந்தது. இதனை கோவிந்தராஜ் (32) என்பவர் ஓட்டி வந்தார். 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கனகலட்சுமி, புளியங்குடி அருகே உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித்குமார் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெண் காவலர் கனகலட்சுமி, மாணவர் அஜித்குமார் ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story