அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல்
மயிலாடுதுறையில் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சாய்ந்தபடி சென்ற பஸ்
மயிலாடுதுறை அருகே தருமபுரம் மற்றும் மன்னம்பந்தலில் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ் பாரம் தாங்காமல் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் சென்றது.
சிறப்பு பஸ்
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து காலை, மாலை ஆகிய 2 நேரங்களிலும் மாணவர்களின் நலன் கருதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணியளவில் கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு மயிலாடுதுறைக்கு ஒரு அரசு சிறப்பு பஸ் வந்தது.பஸ்சில் டிரைவராக திருநாவுக்கரசு, கண்டக்டராக பிரபாகரன் ஆகியோர் இருந்தனர். தொடர்ந்து மற்றொரு கல்லூரியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு பஸ் புறப்பட்டபோது ஏராளமான மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு வந்தனர். இதனால் கண்டக்டர் பிரபாகரன் மாணவர்களை மேலே ஏறி வர கூறினார்.
2 பேருக்கு வலைவீச்சு
அப்போது படியில் தொங்கி கொண்டு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பஸ் சென்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ்சை கொத்ததெரு பகுதியில் வழிமறித்து கண்டக்டர் பிரபாகரனை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் மயிலாடுதுறைக்கு சென்றனர். இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் பிரபாகரன் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கண்டக்டரை தாக்கிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.