கழிப்பறைக்கு செல்ல கட்டணம் கேட்டதால் ஒப்பந்ததாரரிடம் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறைக்கு செல்வதற்கு கட்டணம் கேட்டதால் ஒப்பந்ததாரரிடம் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பறைக்கு செல்வதற்கு கட்டணம் கேட்டதால் ஒப்பந்ததாரரிடம் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கட்டண கழிப்பறை
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் நிலையம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் அங்குள்ள கடைகள் திறக்கப்படவில்லை. அதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் பஸ் நிலையத்தில் தரைதளத்தில் 4 இடங்களில் குளியல் அறைகளுடன் கூடிய கழிப்பறைகள் ஏலம் விடப்பட்டன. இவை ரூ.68 லட்சத்துக்கு ஏலம் போனது. அதையடுத்து அந்த கழிப்பறைகள் கட்டண கழிப்பறையாக அறிவிக்கப்பட்டன. சிறுநீர் கழிப்பதற்கு ரூ.5-ம், இயற்கை உபாதைக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை விட இங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், நியாயமான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று காலை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த பெண், அவர்களிடம் கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் எந்த பஸ் நிலையத்திலும் உள்ள கழிப்பறைகளில் எங்களிடம் கட்டணம் வசூலிப்பது இல்லை. இங்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஒப்பந்ததாரர், கட்டணம் செலுத்தும் நபர்கள் மட்டுமே கழிப்பறையை உபயோகிக்க முடியும். இல்லையென்றால் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அதற்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் இந்த பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை, குடிநீர், ஓய்வறை உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு பஸ்சிற்கும் தினமும் ரூ.15 வசூலிக்கப்படுகிறது. அதனால் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து போக்குவரத்துக்கழக மேலாளர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவிப்போம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கும்படி ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தி உள்ளோம். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றனர்.