அரசு பஸ்-சரக்கு வேன் மோதல்; டிரைவர் உள்பட 4 பேர் காயம்
அஞ்செட்டி அருகே அரசு பஸ்-சரக்கு வேன் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி அரசு பஸ் சென்றது. இதேபோல் எதிரே சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அஞ்செட்டி அருகே முத்துராயன் கோவில் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது அரசு பஸ்சும், சரக்கு வேனும் மோதி கொண்டன. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் வனப்பகுதிக்குள் புகுந்தது. விபத்தில் வேனின் முன் பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் படுகாயம் அடைந்தார். மேலும் பஸ்சில் சென்ற 3 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பஸ் மற்றும் சரக்கு வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.