பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; 2 நண்பர்கள் பலி
பண்ருட்டி அருகே பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானார்கள்.
புதுப்பேட்டை,
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவா மகன் சுகுமார்(வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக மடப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அங்கு வேலை முடிந்ததும் அதே மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பண்ருட்டி அருகே சேமக்கோட்டைக்கு நள்ளிரவு 12.45 மணிக்கு வந்தபோது பண்ருட்டியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 நண்பர்கள் பலி
இந்த விபத்தில் சரண்ராஜ், சுகுமார் ஆகிய இருவரும் பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.