வாழப்பாடி அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
வாழப்பாடி அருகே தனியார் பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள்.
வாழப்பாடி:
தனியார் நிறுவன ஊழியர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பழனி மகன் பிரபு (வயது 23). இவர் போச்சம்பள்ளியில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவன ஊழியர் ஆவர். அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் நவீன்குமார் (22). இவர் ஓசூரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
உறவினர்களான இவர்கள் 2 பேரும் நேற்று காலை ேசலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. வாழப்பாடி அருகே புறவழிச்சாலையில் எதிர்பாராதவிதமாக தனியார் பஸ்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நவீன்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் இறந்தார். விபத்தின் காரணமாக பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் சிறைபிடிப்பு
இதனிடையே வாழப்பாடி நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும் போது, வாழப்பாடி நகருக்குள் வராமல் செல்லும் தனியார் பஸ்களால் தான் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் புறவழிச்சாலை இருவழிப்பாதையாக குறுகலாக உள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.