காரியாபட்டியில் புதிய வழித்தடத்தில் பஸ்
காரியாபட்டியில் புதிய வழித்தடத்தில் பஸ் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி,
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து காரியாபட்டிக்கு தினமும் 80 முறை பஸ் வந்து செல்கிறது. இந்த பஸ் மந்திரி ஓடை வழியாக காரியாபட்டி பஸ் நிலையம் வந்து அதே வழியாக திரும்ப சென்று வந்தது. ஆனால் காரியாபட்டி திருச்சுழி ரோடு, என்.ஜி.ஓ. நகர், அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி பைபாஸ் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுரைக்கு செல்ல வேண்டுமானால் 2 கிலோமீட்டர் நடந்து சென்று தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து காரியாபட்டி வரும் அரசு பஸ்களை திருச்சுழி ரோடு, என்.ஜி.ஓ. நகர், அரசு மருத்துவமனை, கள்ளிக்குடி பைபாஸ் பிரிவு சாலை வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் அரசு போக்குவரத்து கழக மேலாளர்களை சந்தித்து மனு அளித்தார். மேலும் இந்த பகுதி வழியாக பஸ் இயக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டதன் பேரில் இந்த பகுதிக்கு நேற்று புதிதாக பஸ் வழித்தடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து பேசினார். இதில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், தி.மு.க. பிரமுகர்கள் வாலை முத்துச்சாமி, சின்னபோஸ், பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோஷம், காரியாபட்டி முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டியன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் செவல்பட்டி செல்வராஜ், நகர துணைச்செயலாளர் கல்யாணி, கவுன்சிலர்கள் முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.