பஸ் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
பஸ் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை, ராயப்பன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 50) ஓட்டினார். அதில் மொத்தம் 36 பயணிகள் இருந்தனர். செம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி பிரிவில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சுரேஷ், சென்னையை சேர்ந்த முனீஸ்வரன் (33), சரஸ்வதி (40), வெள்ளைத்தாய் (58), போடியை சேர்ந்த காமாட்சி (70) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.