மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பஸ் உரிமையாளர் பலி
வந்தவாசி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சென்னையை சேர்ந்த பஸ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை சிவபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 54), சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பஸ்களை வாடகைக்கு இயக்கி வந்தார். இவர், வந்தவாசியை அடுத்த சென்னாவரம் பகுதியில் உள்ள பஸ் கட்டும் நிறுவனத்தில் தனது பஸ்சை கட்டுமானத்திற்காக விட்டு இருந்தார்.
இந்த பணிகளை பார்ப்பதற்காக சென்னாவரம் வந்த இவர், இரவில் உணவு சாப்பிடுவதற்காக மருதாடு கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில், மருதாடு கிராமம் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.