விரைவு பஸ் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும்

விரைவு பஸ் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
கோவையை சேர்ந்தவர் இ.நிவாஷ். இவர் கோவையில் இருந்து புதுச்சேரி செல்ல கடந்த 2017-ம் ஆண்டு அரசு விரைவு பஸ்சில் 2 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தார்.
ஆனால் பயண தினத்தன்று டிக்கெட் தொலைந்துவிட்டது. இது குறித்து அவர், காந்திபுரத்தில் உள்ள விரைவு பஸ் நிலைய டிக்கெட் வழங்கும் அதிகாரியிடம் முறையிட்டார்.
அப்போது, பஸ்சின் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப்பில் வைத்து இருப்பதால் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். கட்டணத் தை வாபஸ் அளிக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.
ஆனால் அசல் டிக்கெட்டை காண்பிக்காதவரை பயணம் செய்ய அனு மதிக்க முடியாது என்று அதிகாரி கூறி உள்ளார். இதனால் அவர் வேறு டிக்கெட்டுகள் எடுத்து பயணம் செய்துள்ளார்.
ஆனால் தொலைந்த டிக்கெட்டுகளுக்கான இருக்கைகள் காலியாகவே அந்த பஸ் இயக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நுகர்வோர் கோர்ட்டில் நிவாஷ் மனுதாக்கல் செய்தார். அதில், பஸ் போக்குவரத்து அதிகாரி மனஉளைச்சல் ஏற்படும் வகையில் பேசியதாக குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி, மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோர்ட்டு செலவாக ரூ.3 ஆயிரம், டிக்கெட் கட்டணம் ரூ.620 ஆகியவற்றை அரசு விரைவு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.






