500 பேருக்கு மேல் உள்ள கிராமங்களில் பஸ் சேவை: தினமும் 5 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்கின்றனர்- அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தகவல்
500 பேருக்கு மேல் உள்ள அனைத்து கிராமங்களிலும் பஸ் சேவை அளிக்கப்படுகிறது என்றும், தினமும் 5 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்கின்றனர் என்றும் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறினார்.
500 பேருக்கு மேல் உள்ள அனைத்து கிராமங்களிலும் பஸ் சேவை அளிக்கப்படுகிறது என்றும், தினமும் 5 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பஸ்சில் பயணம் செய்கின்றனர் என்றும் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி, மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்குள்ள பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்த அரசு உத்தரவிட்டதின் பேரில், கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பு, பாதசாரிகளின் கவனத்திற்கு, ஓட்டுனர்களின் கவனத்திற்கு போன்ற துண்டு பிரசுங்கள் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற பஸ் நிலையங்களில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பஸ் சேவை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பஸ்கள் கூடுதல் வழித்தடத்துடன் இயக்கப்படுகின்றன. மதுரை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 40 பணிமனைகள் உள்ளன. இங்கு மொத்தம் 2,300 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் தினமும் 10 லட்சத்து 61 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். மாதந்தோறும் சரசாரியாக 3 கோடி பேர் பயணிக்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய திட்டமான மகளிர் கட்டணமில்லா பஸ்களில் மதுரை மண்டலத்தில் தினமும் 5 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 500 பேருக்கு மேல் உள்ள அனைத்து கிராமங்களுக்கு பஸ் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் ராகவன், சமுத்திரம், துணை மேலாளர்கள் அறிவானந்தம், ரவிக்குமார், முருகானந்தம், இணை இயக்குனர்(மக்கள் தொடர்பு) பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் சந்தான கிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் மாரியப்பன், செல்வின், இன்ஸ்பெக்டர் கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.