உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்குள் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதி
உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்குள் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
உடுமலை மத்திய பஸ் நிலையத்துக்குள் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
5 நுழைவு வாயில்கள்
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரின் மையப் பகுதியில் உடுமலை மத்திய பஸ் நிலையம் அமைந்துள்ளது. 5 நுழைவு வாயில்களுடன் செயல்படும் இந்த மத்திய பஸ் நிலையத்தின் 2 நுழைவு வாயில்கள் பழனி-பொள்ளாச்சி சாலையிலும், 2 நுழைவு வாயில்கள் பைபாஸ் சாலையிலும், 1 நுழைவு வாயில் ரவுண்டானா பகுதியிலும் அமைந்துள்ளது.
இதனால் பஸ்களை நிறுத்தவும், பயணிகள் நிற்கவும் போதுமான இட வசதி இல்லாமல் நெருக்கடியான நிலையில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. எனவே நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் பழைய வி.பி.புரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பஸ் நிலையம் விரிவாக்கத்துக்கான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையத்தில் நெருக்கடி தொடர்கதையாகவே உள்ளது.
இந்தநிலையில் உடுமலை மத்திய பஸ்நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ, கார் மற்றும் சரக்கு வாகனங்கள் என அனைத்துவிதமான வாகனங்களும் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றன.
மழைநீர் வடிகால்
பழனி-பொள்ளாச்சி சாலையையும் பைபாஸ் சாலையையும் இணைக்கும் வகையில் இணைப்புச் சாலையாக உடுமலை அரசு பஸ் டெப்போவுக்கு எதிரில் இருந்த சாலை பயன்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக இந்த சாலையின் குறுக்கே தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறாமல் அதே நிலையில் நீண்ட நாட்களாக உள்ளது.
இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் பஸ் நிலையத்தை பலரும் இணைப்பு சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள்ளே அணி வகுத்து வருகின்றன. இதனால் பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் தாறுமாறாக இயக்கப்படும் வாகனங்களால் பயணிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
நடவடிக்கை
மேலும் பஸ் நிலையத்துக்குள் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு அருகிலேயே அதிக அளவில் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இது பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்குள் பஸ்களைத் தவிர மற்ற வாகனங்கள் வராமல் தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வணிக நோக்கத்தில் பஸ் நிலையத்துக்கு உள்ளே பல இடங்களில் தள்ளுவண்டியில் மற்றும் பிளாட்பார கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.