சோலாரில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்


சோலாரில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்
x

சோலாரில் நவீன பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

சோலார்

சோலாரில் நவீன பஸ் நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

ஈரோடு மாநகரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தான் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இங்கிருந்து மினி பஸ்களும் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றன.

ஈரோடு பஸ் நிலையத்துக்குள் தினமும் சுமார் 4 ஆயிரத்து 100 முறை பஸ்கள் வந்து விட்டு செல்கிறது. இதனால் பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, சத்திரோடு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

புதிய பஸ் நிலையம்

இதைத்தொடர்ந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் சோலார் பகுதியில் வந்து செல்லும் வகையில் அங்கு புதிய பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதே போல் சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையமும் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது 2 பஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

பணி தீவிரம்

அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி ஈரோட்டுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புஞ்சைலக்காபுரம் சோலாரில் நவீன பஸ் நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து 24 ஏக்கர் பரப்பளவில் ரூ.63 கோடியே 50 லட்சம் மதிப்பில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது. அதன்படி 79 ஆயிரத்து 666 சதுரமீட்டர் பரப்பளவில் பஸ்நிலையம் அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரைதளம் 7 ஆயிரத்து 746 சதுரமீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4 ஆயிரத்து 260 சதுரமீட்டர் பரப்பிலும், நடைமேடை பரப்பளவு 5 ஆயிரத்து 378 சதுரமீட்டரிலும் மற்றும் சுழற்சி பகுதி 3 ஆயிரத்து 317 சதுரமீட்டர் பரப்பளவிலும் கட்டப்படுகிறது.

63 பஸ்கள் நிறுத்தம்

இது தவிர பஸ் நிலையத்தில் 134 கடைகள், 63 பஸ்கள் நிறுத்தும் வகையில் இடங்கள், 9 டவுன் பஸ்களுக்கு பிரத்யேக நிறுத்தங்கள், 883 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம், ஆட்டோவுடன் 100 வாகனங்கள் நிற்கும் வகையில் நிறுத்தம், பஸ் பயணச்சீட்டு் முன்பதிவு செய்யும் இடம், கழிப்பறைகள், ஓட்டல்கள், நேரம் காப்பாளர் அறை மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளும் பயணிகளுக்காக பஸ் நிலையத்தில் கட்ட வசதிகள் செய்யப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான 51.4 ஏக்கர் நிலத்தில் 19.9 ஏக்கரில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பஸ் நிலையம் கட்டுமான பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story