மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய பஸ்


மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய பஸ்
x

திருச்சியில் பெய்த பலத்த மழையால் மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய தனியார் பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

திருச்சி

திருச்சியில் பெய்த பலத்த மழையால் மேலப்புதூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய தனியார் பஸ்சை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

பலத்த மழை

தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக இருந்தது.

இதனையடுத்து மதியம் 3 மணிக்கு பிறகு வெயில் குறைந்து மேகம் திரண்டது. அப்போது, சில இடங்களில் சிறிது நேரம் மழை பெய்தது. அதன் பின்னர் இரவு 9.30 மணி அளவில் கனமழை பெய்தது.

தனியார் பஸ் சிக்கியது

இந்த மழை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம்போல் ஓடின. இதன் காரணமாக திருச்சி மேலப்புதூர் சாலை அருகே உள்ள ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் வேறு பாதைக்கு மாற்றி விடப்பட்டன.

இதனிடையே சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு வந்த தனியார் பஸ் ஒன்று தேங்கி இருந்த மழை நீரில் இறங்கியது. இதில் அந்த பஸ் வெளியே வரமுடியாமல் திணறியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இறக்கி விடப்பட்டு நடந்தே மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றனர். இதனையடுத்து அந்த பஸ் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து மீட்கப்பட்டது.

வாகனங்கள் ஊர்ந்து சென்றன

மேலும் ஒத்தக்கடை சிக்கனல், அரசு மருத்துவமனை ரோடு, உறையூர் செல்லும் சாலை, பாலக்கரை செல்லும் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியது. தேங்கி கிடைந்த குப்பைகள் மழை நீரால் சாலை நடுவே அடித்து வரப்பட்டது. திருச்சி, மன்னார்புரம், தில்லைநகர், கோட்டை, சத்திரம், மத்திய பஸ் நிலையப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பாரதிதாசன், மேலரண் சாலை, தெப்பக்குளம், சாஸ்திரி, வில்லியம்ஸ், உழவா்சந்தை உள்ளிட்ட சாலைப் பகுதிகளிலும் நகா்ப்பகுதிகளின் தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் நனைந்தபடி சென்றனர். முக்கிய சாலைகள், சந்திப்புகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.


Related Tags :
Next Story